Friday 11 March 2011

சுந்தர ராமசாமி விருது

சுந்தர ராமசாமி விருது திரு.கண்மணி குணசேகரனுக்கு வழங்கப் படுகிறது

ராஜமார்த்தாணடன்



எழுத்தாளர் சுந்தர ராமசாமி நினைவாக நெய்தல் இலக்கிய அமைப்பு நிறுவியுள்ள 'சுந்தர ராமசாமி விருது' இவ்வாண்டு முதல் வழங்கப்படுகிறது. வாசகர்கள், படைப்பாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள் முன்வைத்த பரிந்துரைகளின் அடிப்படையில் எழுத்தாளர்கள் பாவண்ணன், குமாரன், அரவிந்தன் ஆகிய மூவர் அடங்கிய நடுவர் குழு விருதுக்கு உரியவரைத் தேர்ந்தெடுக்கும் பணியில் செயலாற்றியது.

2007 ஆம் ஆண்டுக்கான 'சுந்தர ராமசாமி விருது' இளைய தலைமுறையைச் சேர்ந்த படைப்பாளர்களில் ஒருவரான திரு.கண்மணி குணசேகரனுக்கு வழங்கப் படுகிறது.பத்தாயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் பாராட்டிதழும் கொண்ட இவ் விருதை கண்மணி குணசேகரனுக்கு எழுத்தாளர் திரு.நாஞ்சில்நாடன் இந்த மேடையில் வழங்குகிறார்.விருது பெறும் கண்மணி குணசேகரனை
நடுவர் குழுவின் சார்பில் வாழ்த்துகிறோம்.

இந்த விருது உருவான பின்னணி பற்றியும் விருதுக்குரிய படைப்பாளியைத் தேர்ந்தெடுக்க நடுவர் குழு பின்பற்றிய விதிமுறைகள் பற்றியும் சில கருத்துக்களை இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.தேர்வுக் குழுவின் அறிக்கையை குழுவினரில் ஒருவரான கவிஞர் சுகுமாரன் வாசித்தார். அந்த அறிக்கையை இங்கு முழுமையாகத் தருகிறோம்

சுந்தர ராமசாமியின் முதலாம் நினைவு நாளையொட்டி நெய்தல் அமைப்பின் சார்பில் ஓர் எளிய இலக்கியக் கூட்டத்தை நண்பர் கிருஷ்ணன் ஏற்பாடு செய்திருந்தார்.தமிழ் மலையாள இலக்கிய உறவுகளை மையப் படுத்தி பேராசிரியர். டாக்டர்.கி.நாச்சிமுத்து, சுகுமாரன் இருவரும் உரை நிகழ்த்தினர். இலக்கியவாதிகளும் ஆர்வலர்களும் கலந்து கொண்ட அந்த நினைவு நாள் சந்திப்பு சுந்தர ராமசாமியின் நினைவைப் பேணும்வகையில் தொடர்ந்து செயல்பட ஊக்கமளித்தது.

சுந்தர ராமசாமியின் பங்களிப்பு எழுத்தாளர் என்ற நிலையில் மட்டும் ஒதுங்கி விடுவதல்ல. இலக்கியத்தின் வெவ்வேறு பிரிவுகளிலும் கலாச்சாரச் செயல்பாடுகளின் பல தளங்களிலும் அவரது ஆழமான அக்கறைகள் படர்ந்திருந்தன.சக மனிதனைப் பற்றிய பரிவு கொண்ட எவரும் வெறும் எழுத்தாளனாக மட்டுமே தன்னை முடக்கிக்கொள்வது இயலாது என்ற சமகால உண்மையை அதிகம் உணர்ந்தவராகவும் அதற்கிசையச் செயல்பட்டவராகவும் சுந்தர ராமசாமி இருந்தார்.இந்த உணர்வின் விளைவாக புதிய தலைமுறை
இலக்கியவாதிகளுடனும் வாசகர்களுடனும் தொடர்ந்து உரையாடல் நடத்துபவராகவும் இருந்தார். மூத்த எழுத்தாளர் ஒருவர் சமகால எழுத்துடனும் பண்பாட்டு நடவடிக்கைகளுடனும் கொள்ளும் உறவாக இதைக் குறிப்பிட வேண்டும்.அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கத் திரண்டவர்களில் பெரும்பான்மையோர் இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்களாகவே இருந்தார்கள் என்பது இந்த உறவின் நிரூபணம்.

எனவே சுந்தர ராமசாமியின் நினைவைப் போற்றும் விதத்தில் நிறுவப்படும் விருதை, புதிய தலைமுறையைச் சேர்ந்த படைப்பாளி ஒருவருக்கு வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. இன்றைய தலைமுறையைச் சேர்ந்த நாற்பது வயதுக்குட்பட்ட படைப்பாளி ஒருவருக்கு வழங்கலாம் என்றும் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு படைப்பாக்கங்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு மட்டுமாக விருது வழங்கலாம் என்றும் திருத்தங்கள் சேர்க்கப்பட்டன.நெய்தல் அமைப்பின் நிறுவனரான கிருஷ்ணன் விரும்பியதற்கிணங்க
மூன்று பேர் கொண்ட நடுவர் குழு உருவானது.மூவரும் தனித்தனியாகவும் இலக்கிய நண்பர்களுடனும் கலந்து உரையாடி விவாதங்கள் நடத்திய பின்னர் சுந்தர ராமசாமி விருது பற்றிய அறிவிப்பு ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. அதில் இரண்டு மாதக் காலத்துக்குள் பரிந்துரைகளை அனுப்பும்படி கேட்டுக்கொண்டிருந்தோம். இலக்கியத்தை சீரிய செயல்பாடாகக் கருதும் எழுத்தாளர்கள், வாசகர்கள், இலக்கிய ஆர்வலர்கள் எவரும் விருதுக்காகப் பரிந்துரை செய்யலாம் என்றும் அறிவித்திருந்தோம்.

இலக்கிய இதழ்களிலும் இணைய தளங்களிலுமாக வெளியிடப்பட்ட இந்த அறிவிப்புக்குக் கிடைத்த எதிர்வினை உற்சாகமூட்டக் கூடியதாகவே இருந்தது. கடிதங்கள் மூலமாகவும் குறுஞ்செய்திகளாகவும் தொலைபேசி வாயிலாகவும் வாய்மொழிப் பதிவாகவும்
பரிந்துரைகள் செய்யப்பட்டன.அவை அனைத்தும் பதிவு செய்யப்பட்டன.

விருது அறிவிப்பைத் தொடர்ந்து வந்த நாட்களில் பதிவு செய்யப்பட்ட எல்லாப் பரிந்துரைகளும் தேர்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன. வாசகர்களும் ஆர்வலர்களும் பதிப்பாளர்களும் நண்பர்களும் பரிந்துரை செய்திருந்தனர். ஓரிரு எழுத்தாளர்கள் தங்களைத் தாங்களே பரிந்துரைத்திருந்தனர். சிலர் நண்பர்கள் வாயிலாக பத்துக்கு மேற்பட்ட பரிந்துரைக் கடிதங்களை
அனுப்பியிருந்தனர்.பத்தும் ஒரே கையெழுத்தில் இருந்தது குறிப்பிடத்தகுந்த செய்தி. இதுவரை நிறைய கவிதைகளை எழுதி வைத்துள்ள கவிஞர் ஒருவர் இந்த விருது தனக்கே வழங்கப்படவேண்டும் என்று கேட்டிருந்தார். விருதுத்தொகை மூலம் தன்னுடைய வறுமை நீங்குமென்றும் தமிழுக்கு ஒரு புதிய கவிஞர் கிடைப்பாரென்றும் உத்தரவாதமளித்திருந்தார். எழுதி வெளியான படைப்புளை முன்னிருத்தியே விருதுக்கான படைப்பாளியைத் தேர்ந்தெடுப்பது என்ற நடுவர் குழுவின் விதிமுறை ஒரு புதிய கவிஞரை
தமிழுலகுக்கு அறிமுகம் செய்யும் வாய்ப்பைத் தடை செய்து விட்டது.

நெய்தல் அமைப்புக்குக் கிடைத்திருந்த 41 பரிந்துரைகளுடன் நடுவர் குழுவின் பரிந்துரைகளும் சேர்த்து முதற்கட்டத் தேர்ந்தெடுப்பு நடைபெற்றது. இந்தக் கட்டத்தில் தேர்வுக்குரியவையாக இருந்த பெயர்களை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.அவை: யூமா.வாசுகி, ஜே.பி.சாணக்யா,திலகபாமா,·பீனிக்ஸ், மாலதி மைத்ரி,சல்மா, என்.ஸ்ரீராம், குமரி ஆதவன், பிரேம் - ரமேஷ், சு.வேணு கோபால், ஆத்மநாதன், இளவேனில், சு.தமிழ்ச்செல்வி, மகேஷ்குமார், ஷோபா சக்தி,பிரான்சிஸ் கிருபா,கண்மணி குணசேகரன்,மாரம்பாடி பாஸ்கர், மனுஷ்ய புத்திரன்,ஆ.இரா.வேங்கடா சலபதி, ஜோ.டி குரூஸ்.

இந்த வரிசையிலிருந்து நாற்பது வயதைக் கடந்த சிலரது பெயர்கள் நீக்கப் பட்டன.மிக அதிகமானவர்களால் பரிந்துரைக்கப்பட்டும் யூமா. வாசுகியின் பெயர் விலக்கப்பட்டதற்கு இந்த விதி காரணம்.படைப்பிலக்கியத்துக்கு வழங்கப்பட்டிருந்த முன்னுரிமை விதியால் ஆ.இரா.வேங்கடாசலபதி உள்ளிட்ட ஓரிரு பெயர்கள் விலக்கப்பட்டன.அச்சியற்றப்பட்டு வெளியாகாத படைப்பை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதில்லைஎன்ற விதியின் கீழ் ஒரு பெயர் நீக்கப்பட்டது.இதிலிருந்து இரண்டாம் கட்டப் பரிசீலனைக்கான புதிய பட்டியல் உருவாக்கப்பட்டது.அதில் இடம் பெற்றிருந்த பெயர்கள் வருமாறு. ஜே.பி.சாணக்யா, பிரான்சிஸ் கிருபா,மாலதி
மைத்ரி,சல்மா,என்.ஸ்ரீராம், ஜோ டி குரூஸ்,கண்மணி குணசேகரன், மனுஷ்யபுத்திரன்.

கிடைக்கப் பெற்ற பரிந்துரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் மூன்றாம் பட்டியல் உருவானது.அதில் இடம் பெற்றிருந்தவர்கள் சல்மா,மனுஷ்யபுத்திரன், பிரான்சிஸ் கிருபா,கண்மணி குணசேகரன் ஆகியோர்.பரிந்துரைகளின் மதிப்பீட்டின்படி பெற்றிருந்த புள்ளிகள் சார்ந்து இந்த வரிசை உருவானது. இந்த கட்டத்தில் மூவர் அடங்கிய நடுவர் குழுவின் பரிந்துரையும் கணக்கில் கொள்ளப்பட்டது. நடுவர் குழுவிலிருந்த இருவரின் பரிந்துரையில் ஜே.பி.சாணக்கியாவின் என்.ஸ்ரீராமின் பெயரும் இடம் பெற்றிருந்தன.அதைத்
தவிர விருதுக்குரியவர்களாக முன்வைக்கப்பட்ட பெயர்களில் மாறுதல் எதுவும் இருக்கவில்லை. இதுவரையிலான படைப்பாக்க முயற்சிகள்,படைப்புகளில் வெளிப்படும் பன்முக அக்கறைகள், படைப்பாக்கச் செயல்பாட்டுக்கான முனைப்பு ஆகிவற்றை முன்னிருத்தி விவாதம் நடத்தியதில் கண்மணி குணசேகரன் முன்னிலை பெற்றார்.அவரையே விருதுக்குரியவராகத் தேர்ந்தெடுப்பது என்ற தீர்மானத்தை மூவரும் ஏக மனதாக மேற்கொண்டேம். அந்த அடிப்படையில் திரு.கண்மணி குணசேகரனை 2007 ஆம் ஆண்டுக்கான 'சுந்தர ராமசாமி' விருது' பெறுபவராகத் தேர்வு செய்திருப்பதை நடுவர் குழுவின் சார்பில் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்.

கண்மணி குணசேகரன் வயது முப்பத்தி ஆறு, விருத்தாச்சலம் அருகிலுள்ள மணக்கொல்லை கிராமத்தில் பிறந்தவர். அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனையில் தொழிலாளி. இருபது வயது கல்லூரிப் பருவம் முதல் எழுதி வருபவர். தொண்ணூறுகளிலிருந்து கவனத்துக்குரிய பங்களிப்புகளை செய்து வருகிறார்.இரண்டு கவிதை நூல்கள் - தலைமுறைக் கோபம்,காற்றின் பாடல் - மூன்று சிறுகதைத் தொகுதிகள் உயிர்த்தண்ணீர்,ஆதண்டார் கோயில் குதிரை, வெள்ளெருக்கு, இரண்டு நாவல்கள் - கோரை,அஞ்சலை ஆகியவை கண்மணி குணசேகரனின் படைப்புகள்.



( கவிஞர் வினய சந்திரன், நெய்த்ல் கிருஷ்ணன்,நாஞ்சில் நாடன், சுகுமாரன், கண்மணி குணசேகரன், அரவிந்தன்)

கடலூர்,விருத்தாச்சலம் பகுதிகளை உள்ளடக்கிய நடுநாட்டு மனித வாழ்க்கையே கண்மணி குணசேகரனின் புனைகளம்.விவசாயத்
தொழிலாளிகளின் எழுதித் தீராத துன்பத்தையே குணசேகரன் படைப்புகளின் பொருளாக்குகிறார்.மண் சார்ந்த வாழ்க்கை என்பதனால் எதார்த்தவாதத்தை தன்னுடைய படைப்பு அழகியலாகக் கொண்டிருக்கிறார் என்று குறிப்பிடுவது இந்த எழுத்தை வகைப்படுத்த உதவும் ஓர் அடையாளம். இந்த அடையாளத்திலிருந்து தொடங்கி பெரும் பரப்பாக விரிவடையும் படைப்பாக்கம் என்று அவருடைய இரு நாவல்களை முன்வைத்துப் பேசலாம். இதே இயல்பைக் கொண்டிருப்பவை இவரது சிறுகதைகளும். அறியப்படாத
களத்தையும் சூழலையும் சம கால இலக்கியத்தில் முதன்மை பெறச் செய்யும் படைப்பாற்றலுக்காக கண்மணி குணசேகரன் இந்த ஆண்டுக்குரிய 'சுந்தர ராமசாமி' விருதைப் பெறுகிறார்.அவருக்கு வாழ்த்துக்கள்.இந்தத் தேர்வுக்கு ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றி.-
***************

நிகழ்ச்சியில் மலையாளக் கவிஞர் வினயசந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தற்கால மலையாளக் கவிதைகளின் போக்கு பற்றி உரையாற்றினார். நாஞ்சில் நாடன் கண்மணி குணசேகரனுக்கு விருது வழங்கி சிறப்புரை ஆற்றினார். குணசேகரன் தனது ஏற்புரையில் தனது வாழ்வின் பின்ணியில் தனது படைப்பு முயற்சிகள் பற்றிச் சுவையாக விவரித்தார். விருது வழங்கும் முயற்சி உருவான விதத்தை நெய்தல் கிருஷ்ணன் தனது வரவேற்புரையில் விளக்கினார். சு.ரா.வின் பெயரில் விருது வழங்குவதில் உள்ள முகியத்துவத்தை அரவிந்தன் தனது நிறைவுரையில் குறிப்பிட்டார்.

நாகர்கோவில் மேற்கு சுழற்சங்கம் விழாவை நடத்தப் பெருமளவில் உதவிபுரிந்தது.
நன்றி ‍திண்ணை

No comments:

Post a Comment