Friday, 11 March 2011

நெடுஞ்சாலை-கண்மணி குணசேகரன் -நாவல் அறிமுகம்

நெடுஞ்சாலை-கண்மணி குணசேகரன் -நாவல் அறிமுகம்

கண்மணி குணசேகரனின் நெடுஞ்சாலை நாவல் தமிழில் ஒரு புதிய பாதையை திறக்கிறது.பெரியார் பணிமனையில் மெக்கானிக்காக பணிபுரியும் கண்மணி குணசேகரனின் அனுபவ தளத்தில் விரிகிறது இந்நாவல்.
தமிழில் வலுவான பின்புலங்களை களங்களாக கொண்ட நாவல்கள் குறைவு. சமீபகாலங்களில் சொன்னால் ஜோடிகுரூஸின் ஆழி சூழ் உலகு, கொற்கை, கோபாலகிருஷ்னனின் மணல் கடிகை போன்றவற்றை சொல்லலாம். நெடுஞ்சாலையின் பின்புலம் அரசு போக்குவரத்து துறையின் பணிமனை.

பெரியார் பணிமனையில் தற்காலிக ஊழியர்களாக வேலைபார்க்கும் மூன்று இளைஞர்களின் பார்வையில் நெடுஞ்சாலை நீள்கிறது.
ஒரு அரசு பொதுத்துறை, அதுவும் மக்கள் உயிரோடு சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை எத்தனை அலட்சியமாக சமாளிப்புகளோடு, பெரும் மனிதபிரயத்தளங்களில், உழைப்பில், தற்காலிக ஊழியர்களின் கடும் மன அவஸ்தைகளோடு தனியார் போக்குவரத்து நிறுவனங்களின் கெக்கலிப்போடு இயங்கி கொண்டிருக்கிறது என்பது இதன் ஒவ்வொரு பக்கங்களிலும் உணரமுடிகிறது.
ஒரு களத்தை பின்புலமாக கொண்டதல்ல இந்நாவலின் சிறப்பு. அதை கலையாக்கத்துடன் நெய்திருப்பதே கண்மணியின் பலம். நாவல் எங்கும் நுட்பமான குறிப்புகளுடன் இதை சாத்தியப்படுத்துகிறார் கண்மணி.
நெடுக நெடுக நுட்பமான குறிப்புகள். இருபது வருடம் டீசல் அடித்து டீசல் அடித்து கண்கள் மங்கிப்போன சிவமணி, எப்பொழுதும் தூங்கிக்கொண்டே இருக்கும் மருதமலை, ராஜ ராஜேஸ்வரி பஸ் ஓனர் செட்டி, அரசு பேருந்து சீ.எல். ஓட்டுனருக்கு லஞ்சம் தரும் தனியார் பஸ் கிளீனர், அதற்கு ஊடகமாக கடலை பொட்டலம், எப்பொழுதும் கர்த்தர் வழிபாட்டில் இருக்கும் செக்யூரிட்டி, மாலை டிரிப்பில் லைட் வயர்களை அறுத்து விடும் பள்ளி மாணவர்கள், பெர்சனல் மேனேஜரையே அடையாள அட்டை கேட்டு இறக்கிவிடும் ஓட்டுனர், ஜி.எம்.கள், மல்லுக்கட்டும் டைம் கீப்பர்கள், வேலைக்கே வராத ஆளுங்கட்சி தொழிற்சங்கம் சார்ந்த ஊழியர்கள், தன் கணவன் ஏழைமுத்து ஓட்டும் வண்டியில் ஒருமுறை டவுனுக்கு போய் வரவேண்டும் என்று ஏங்கும் பார்வதி, வண்டியில் இருக்கும் வாந்திகளை தேடி தேடி திண்ணும் நாய், இப்படியான நுட்பமான சித்தரிப்புகளும் பாத்திரங்களும்.
எளிய மனிதர்களின் கதை தான் இது. தற்காலிக ஊழியர் என்ற பெயரில் அடிமைகளை போல் நடத்தப்படும் ஓட்டுனர்கள், நடத்துனர்கள், மெக்கானிக்குகள். இவர்களுக்கு முன் எப்பொழுதும் நிரந்தர வேலை என்ற மாயமான் ஓடிக்கொண்டே இருக்கிறது. வேலை நிரந்தரம் ஆவதற்காக அன்றாடம் கடுமையான வேலைகளையும், அவமானங்களையும், தாங்கி தாண்டி காத்திருக்கிறார்கள். அவர்களின் சிறிய விருப்பங்களும் கோரிக்கைகளும் இரக்கமற்று புறக்கணிக்கப் படுகின்றன.
சொல்லாமல் கொல்லாமல் முறிந்து போகும் தமிழ் – கலைச்செல்வி காதல், முன்பு தன் மனதில் தேங்கி இருந்தவளை மறுபடியும் பார்க்கும் ஏழைமுத்து, பெரிதாய் ஒன்றும் பேசிவிட முடியாமல் இருவருக்கும் இடையே நிகழ்காலம் கொடூரமாய் நிற்கிறது. எந்த வண்டியில் என்றைக்கு போவோம் என்று தீர்மானிக்க முடியாத தற்காலிக ஊழியரின் பணியைப் போலத்தான் அவர்கள் வாழ்வும் இருக்கிறது.
நாவலின் கலையாக்கத்தின் உச்சம் அய்யனார் - சந்திரா மறுபடியும் சந்திப்பது. வாழ்வு என்பது நாம் நினைப்பது போல் இல்லை, அது அதன் போக்கில் பயனப்படும். அய்யனார் கொத்தனாராக வேலை பார்த்த பொழுது அவன் மனதுக்கு மிக நெருக்கமான சித்தாளாய் இருந்தவள் சந்திரா. பின்பு அவளுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளோடு, கணவன் அவளை கைவிட்டு, அவள் சித்தாளாக தொடர்கையில் சில வருடங்களுக்கு பின் தற்காலிக ஊழியரான அய்யனார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சமயத்தில் தற்செயலாய் சந்திக்கிறார்கள். ஒரு நாள் மறுபடியும் இணைந்து வேலை பார்க்கிறார்கள். தண்ணீர் வற்றிப்போன ஆற்றில் முன் இரவில் நடக்கிறது அவர்களின் புணர்ச்சி. “இனி நீ என்னை பாக்கவே கூடாது அய்யனாரு, கல்யாணம் பண்ணி குழந்தகுட்டியோட நல்லா இரு.” என்று கூறிவிட்டு போகிறாள் சந்திரா.
ஆறு மெலிந்து ஓடுகிறது. மறுபடியும் ஒருநாளும் திரும்பி வராத ஒரு நாள் அது சந்திராவுக்கும் அய்யனாருக்கும். நாவலின் ஆக உச்சமும் துக்கமும் இதுவே என நான் கருதுகிறேன்.
அற்பகாரணங்களுக்காக பணி இழக்கிறார்கள் தமிழும் ஏழைமுத்துவும். மறுபடியும் பழைய வாழ்வுக்கு திரும்புகிறார்கள். இந்த தற்காலிக வேலையை அடிப்படையாக கொண்டு போட்டிருந்த சிறிய கணக்குகள் கூட நிறைவேறவில்லை. ஏழைமுத்து மறுபடியும் டிராக்டர் ஓட்டவும், தமிழ் தன் அப்பாவின் பெட்டிக்கடைக்குமாக. அய்யனார் தொடர்ச்சியாக மெக்கானிக்காக மிகவும் சிரமத்துடன் தாக்குபிடித்துக் கொண்டிருக்கிறான்.

நாவலின் “வீடு” பகுதியில் இருக்கும் செறிவு, ”நாடு” பாகத்தில் குறிப்பாக அந்த பேருந்தின் சென்னை நோக்கிய பயணத்தில் வெகுவாக குறைகிறது. நம்மை மிகவும் பதற்றத்துக்குள்ளாக்க வேண்டிய பகுதி அது. ஒரு அறுபது எழுபது பயணிகளின் உயிரோடு விளையாடும் பயணம் அது. ஆனால் அந்த பதற்றம் பின் தள்ளப்பட்டு நகைச்சுவையே முன் வந்து நிற்கிறது. பெரும் மனநெருக்கடியை உருவாக்கும் வகையில் கண்மணி அதை சித்தரித்து இருக்க வேண்டும். நிச்சயமாய் இது ஒரு பெரும் குறையே.
நெடுஞ்சாலைக்கு இரவென்றும் பகலென்றும் இல்லை. மழையென்றும் வெயிலென்றும் இல்லை. எல்லாவற்றின் ஊடாகவும் அது இருக்கின்றது. கண்மணியின் இந்த நெடுஞ்சாலையும் ஒரு கறுப்பு வெள்ளை சித்திரமாகவும் சமயங்களில் வண்ணத்திலும் மிகவும் கலையாக்கத்தோடு இந்த வாழ்வை தீட்டுகிறது. அதுவே இதை தமிழில் நல்ல நாவல்களில் ஒன்றாக ஆக்குகிறது.
- சாம்ராஜ்
நன்றி சாம்ராஜ்

No comments:

Post a Comment