Friday 11 March 2011

கண்மணி குணசேகரனின் நடுநாட்டு சொல்லகராதி

‘விருத்தாசலம், நெய்வேலி, வடலூர், கடலூர், பண்ருட்டி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய, நடுநாடு என்று சொல்லப்படுகின்ற இடங்களில் வாழும் மக்களின் பயன்பாட்டில் உள்ள பல்வேறு சொற்களையும் சேகரித்து, அதன் பொருள் பயன்பாட்டுடன் தந்துள்ளார் கண்மணி குணசேகரன்’ என்கிறது ‘விருபா‘ .
பதிப்பகம் : தமிழினி  . இந்த அகராதி பற்றிய விமர்சனம் வேண்டுபவர்கள் பிரம்மராஜனின் ‘நான்காம் பாதை’ 2ஆம் இதழைப் பார்க்கவும். பழனிவேலு எழுதியிருக்கிறார். நான் பதிவது ‘கண்மணி குணசேகரன் : சொற்களைத் தேடி ஒரு பயணம்’  – என்ற தலைப்பில் வந்த [தினகரன் (1/2/2009) , 'வசந்தம்' இணைப்பிதழ்]  சிறுகட்டுரை. செந்தில்குமார் எழுதியது. எனக்கும் கூட இந்தமாதிரி அகராதி தொகுக்கும் ‘ஹாஜத்’ உண்டுங்க,  என்னா ஒன்னு, அது தமிளா இக்யாது!
மக்கள் தொ.காவில் அழகிய பெரியவன் (ஆம்பூர் பேய்களை கிழித்திருக்கும்  ‘காலணியில் நசுங்கும் தொழிலாளர்கள்‘ கட்டுரை படித்தீரா ரூமி?) , பெருமாள் முருகன், கண்மணி குணசேகரன் பேசுவதைக் கண்கொட்டாமல் பார்ப்பேன்.  கண்மணி படு யதார்த்தம், அவருடைய எழுத்து போலவே. ‘தான் கண்ட பழகிய மனிதர்களை உலகை எவ்வித சித்தாந்தப் பூச்சும் இன்றி நம் முன் வைக்கும் கண்மணி குணசேகரன்  ஒரு வித்தியாசமான படைப்பாளி. இன்னமும் ஒரு கிராமத்து விவசாயியின் பிரக்ஞையிலேயே வாழ்பவர். தன்னைச் சுற்று ஒரு ஒளி வட்டம் சுழல்வதாக எண்ணாத ஒரு தமிழ் படைப்பாளி’ என்று வெ.சா எழுதியிருப்பதை இருட்டில் நின்று வழிமொழிகிறேன்.
***
‘கண்மணி குணசேகரன் : சொற்களைத் தேடி ஒரு பயணம்
எஸ். ஆர். செந்தில்குமார்
ஓசையில்லாமால் சாதிக்கும் மனிதர்கள் கிராமப்புறங்களில் ஏராளம். அந்த வரிசையில் கண்மணி குணசேகரனையும் சேர்த்துக் கொள்ளலாம். கவிஞராகப் படைப்புலகில் அறிமுகமாகி சிறுகதை, நாவல் என தனது படைப்பின் களத்தையும் எல்லையையும் விரிவுபடுத்தி புருவம் உயர்த்த வைத்த மல்லாட்டை மனிதர் இவர். கண்மணியின் ‘நடுநாட்டுச் சொல்லகராதி’ தொகுப்பு சமீபத்தில் தமிழக அரசு விருது பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
கண்மணி குணசேகரனின் பேச்சில், அவரது தேடல் தென்றல் நாற்றில் நடைபயில்வதைப் போல சரளமாக வந்து விழுகிறது.  கிராமத்துப் புழுதியையும் கூடவே ஒட்டியிருக்கும் மண் வாசனையையும் உணர முடிகிறது.
“அ. குணசேகர்… இதுதான் என் பெயர். எழுத்துலகத்துக்காக எழிலாக வந்து ஒட்டிக் கொண்டது ‘கண்மணி’. விருத்தாசலம் அருகே மணக்கொல்லையில் விவசாய குடும்பத்தில் பிறந்த என்னை கவிஞனாக்கியது எது தெரியுமா? ஐ.டி.ஐ படிக்கச் செல்லும் வழியில், சாலையோர மண்ணை பூசிக்கொண்டிருந்த நொச்சிச் செடி.
‘நொச்சிச் செடியே
கண்நோயால்
நொந்து மனம் வாடுபவர்க்கு
உன் சாற்றினால்
சாடி விட்டாய்
கண்நோய்தனையே
உன் மர்மங்கள் அறியாமல்
மண்பூசி நிற்பதன் மாயமென்ன’
- இப்படித் தொடங்கிய கிறுக்கல்கள் மண்ணையும் மனிதர்களையும் பதிவுசெய்யத் தொடங்கி, கண்மணி குணசேகரன் கவிதைகள், காட்டின் பாடல், தலைமுறை கோபம் என் மூன்று கவிதை தொகுப்புகளும், உயிர் தண்ணீர், ஆதண்டார்கோயில் குதிரை, வெள்ளெருக்கு என சிறுகதைத் தொகுதிகளும், அஞ்சலை, கோரை என இரண்டு நாவல்களுமாக நீண்டது. இப்போது நடுநாட்டுச் சொல்லகராதி வெளியிட்டதன் மூலம் தொகுப்பாளனாக பரிமளிக்க வாய்ப்பு” என்கிற கண்மணி குணசேகரன் நீண்ட பெருமூச்சு விடுகிறார்.
“இது ஆறாண்டு கால உழைப்பு. இதற்கு முன் வெளிவந்த கி. ராஜநாராயணனின் கரிசல் வட்டாரச் சொல் அகராதி, பெருமாள் முருகனின் கொங்கு வட்டாரச் சொல் அகராதி ஆகியவைதான் எனக்கு ஊக்கம் தந்தவை.
மல்லாட்டை மண்ணில் சும்மார் 5 ஆயிரம் வட்டாரச் சொற்களை சேகரித்து, பல இடங்களில் பொதுவாக வழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் சொற்களை நீக்கிவிட்டு இத்தொகுப்பை இறுதி செய்தேன். இத்துடன் இந்த மண்ணில் இயல்பான பயன்பாட்டில் உள்ள 400 பழமொழிகள், 200 மரபுத்தொடர்களையும் எடுத்துக்காட்டுகளுடன் தந்திருக்கிறேன். வட்டாரச் சொற்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வரும் இந்த கால கட்டத்தில் தக்க சமயத்தில் இதை செய்திருப்பதாக நினைக்கிறேன்.
கோக கோலாவின் வருகைதான் மொழியில் மரணம். ஆம்… மொழியை இவை சிறுகச் சிறுகச் சாக அடித்து விடுகின்றன. வழக்குச் சொற்கள் தூய்மையான தமிழ்ச் சொல்லின் மருவு. ஆனால், கோலாவின் வருகை அம்மா, அப்பாவை அழித்து மம்மி, டாடிகளை விதைத்து தமிழ் மொழியின் கழுத்தை நெரித்து விடுகிறது” என்கிற குணசேகரனின் பேச்சில் கோபம் கொப்பளிக்கிறது.
கண்மணி குணசேகரனது உழைப்பின் மகத்துவம் நாளைய சமுதாயத்துக்கு நிச்சயம் புரியும். ஒதப்பை என்கிற வட்டாரச் சொல் ஆட்டின் வயிற்றில் செரிமானம் ஆகாமல் உள்ள தழைச்சாந்தைக் குறிக்கும். அதே சமயம் நெல் வேரில் உள்ள கரையாத சேறுக்கும் ஒதப்பை என்றே பெயர். இப்படி பல வார்த்தைகள் அரிய தகவல்களோடு தொகுப்பு முழுவதும் விரவிக் கிடக்கின்றன.
ஒரு பல்கலைக்கழகமோ, மொழி ஆராய்ச்சி நிறுவனமோ செய்ய வேண்டிய பணியை தனி மனிதனாக செய்திருக்கிறார்.
**
நன்றி : எஸ். ஆர். செந்தில்குமார், தினகரன்
***
சில சுட்டிகள் :
அழிவிலாத கண்ணீர் / கண்மணி குணசேகரனின் ‘அஞ்சலை’ - ஜெயமோகன் (திண்ணை)
கண்மணி குணசேகரனின் வெள்ளெருக்கு - அய்யனார்
கண்மணி குணசேகரன் கவிதைகள் - ச.முத்துவேல்
நன்றி- ஆபிதீன் 

2 comments:

  1. விஜயாபதிப்பகம் கோவை மாவட்ட தலைமை நூலகம் இணைந்து நடத்திய இலக்கிய சந்திப்பில் திரு கண்மணி குணசேகரன் அவர்களின் பேச்சு கலையை நேரில் பார்க்க நேர்ந்தது ............மனுஷன் எந்த வித பாசாங்கும் இல்லாமல் இயல்பாய் பேசுகிறார் அவரின் எழுதும் அவரை போலவே எதார்த்தமாய் இருக்கு ,,,,,,,அவரின் வட்டார வழக்கு சொற்கள் ஒப்பாரி பாடல் என்னை மிகவும் பாதித்தது .....ஒரு எழுத்தாளன் சமகாலத்தை பதிவு செய்யும் காலத்தின் கண்ணாடி என்பதை உணர்ந்தேன் ...........நன்றி திரு கண்மணி குணசேகரன்

    நானும் கூட எழுதுகிறேன் http://kovaimusaraladevi.blogspot.in

    ReplyDelete